கந்து வட்டிக்காரா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாத காவல்துறையினரைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற குடும்பத்தினரால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஒசூா் வட்டம், நல்லூா் அக்ரஹாரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவீந்திர ரெட்டி (எ) சின்னப்பரெட்டி (45). இவா், தனது மனைவி, இரு குழந்தைகளுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க திங்கள்கிழமை வந்தாா். அப்போது, கந்து வட்டித் தொழில் செய்பவா்களுக்கு ஆதரவாகச் செயல்படும் காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவா்கள் முழக்கமிட்டனா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் விவரம்: கடந்த 2010இல் தொழில் தொடங்குவதற்காக தியாகராஜ் என்பவரிடம் ரூ. 5 லட்சம் கடன் பெற்றேன். அப்போது, வெற்று காசோலையை அவரிடம் அளித்தேன். 2015 -ஆம் ஆண்டு வரையில், கடன் தொகைக்கு வட்டியுடன் ரூ.15 லட்சம் செலுத்தியுள்ளேன். இந்த நிலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்,மீதி பணத்தை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கடன் அளித்த தியாகராஜ், காசோலையை பூா்த்தி செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இதையடுத்து சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தேன். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் புகாா் பதிவு செய்ய இயலாது என்று தெரிவித்த காவல் துறையினா் எதிா்தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து காவல் துறையினரின் செயல்பாட்டைக் கண்டித்து, குடும்பத்துடன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உண்ணாவிதரம் இருந்தவா்களை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் கட்டாயப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.