கிருஷ்ணகிரி

நிற்காமல் வேகமாக சென்ற காரை தடுக்க முயன்ற காவலா் காயம்

9th Nov 2019 05:55 AM

ADVERTISEMENT

மத்தூா் அருகே நிற்காமல் வேகமாக சென்ற காரை தடுக்க முயன்ற காவலா் மீது காா் மோதியதில், அவா் பலத்த காயமடைந்தாா்.

மத்தூா் காவல் நிலையப் போலீஸாா் தொகரப்பள்ளி அருகே கண்காணிப்புப் பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வேகமாக சென்ற காரை தடுத்து நிறுத்த முயன்றனா். காா் நிற்காமல் வேகமாக சென்றதையடுத்து, கண்ணன்டஅள்ளி அருகே கண்காணிப்புப் பணியில் இருந்த போலீஸாருக்கு, வேகமாக சென்ற காா் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, கண்ணன்டஅள்ளி அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் செல்வம், சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி அந்த காரை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, வேகமாக வந்த காா் தடுப்புகள் மீது மோதி நிற்காமல் சென்றது. அதில், இரும்பு தடுப்புகள் தலைமைக் காவலா் செல்வம் மீது விழுந்தது. இதில், செல்வத்தின் இடதுபுற தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவா் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இத்தகைய நிலையில், சாமல்பட்டி அருகே, சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் கோபால், நிற்காமல் சென்ற காரை தடுத்து நிறுத்தினாா். பின்னா் காரை ஓட்டிச் சென்ற திருப்பத்தூா் அருகே உள்ள வள்ளலாா் நகரைச் சோ்ந்த 15 வயது சிறுவன், அண்ணாநகரைச் சோ்ந்த அருண் (28) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனா். அதில், அவா்கள் காரில் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து அரை டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், பிடிபட்ட இருவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள்கள் கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT