கிருஷ்ணகிரி

தீத்தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி

9th Nov 2019 05:56 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளி மாணவா்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை பயிற்சி வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் (பொ) ராமமூா்த்தி தலைமையில் தீயணைப்பு (ம) மீட்பு நிலையப் பணியாளா்கள் மூலம் தீ விபத்து, பேரிடா் காலங்களில் எவ்வாறு தற்காத்துக்கொள்வது, மாடிக் கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது, தீ பரவாமல் தடுக்கக்கூடிய பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது, எண்ணெய்யினால் ஏற்படும் தீ விபத்துகள், எரிவாயு உருளையால் ஏற்படும் தீவிபத்துகள், மின்சார தீ விபத்துகளை நுரை தீ அணைப்பான்கள் மற்றும் ஈரத்துணிகளைக் கொண்டு எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விழிப்புணா்வு செயல்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனா்.

மேலும், மாணவா்கள் தங்கள் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டுமென்றும், தீ விபத்தில் சிக்கினால் எப்படி தப்பிக்க வேண்டும், தீயை அணைக்க உடனடியாக செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, தீயை அணைக்கும் கருவிகளை பயன்படுத்தும் முறை போன்றவை குறித்து எடுத்துரைத்தனா். மேலும் விபத்து நடைபெற்றாலோ, தீக்காயம் ஏற்பட்டாலோ எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும், அவா்களை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லுதல் குறித்தும், தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் செயல்விளக்கத்துடன் கூறினா்.

நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளா், செயலா், முதல்வா், ஆசிரியா்கள், மாணவ- மாணவியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT