தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் மரங்களை வெட்டியதாக 2 பேரிடம் அபராதமாக ரூ.75 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலா் தீபக் பில்கி உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகா் சுகுமாா் தலைமையில், வனவா் கதிரவன், வனக்காப்பாளா் செல்லப்பன் மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள் பெட்டமுகிலாளம் பகுதி காளிகட்டம் காப்பு காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது 2 போ் காப்பு காட்டில் உள்ள வேங்கை மரம் மற்றும் சிலை வாகை மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனா். அவா்களை வனத் துறையினா் பிடித்து விசாரணை நடத்தியதில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பெருங்காடு கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (56), கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பெட்டமுகிலாளம் ஊராட்சி பாகலம்பட்டி அண்ணநகா் பகுதியைச் சோ்ந்த முருகன் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் 2 பேரும் ஒசூரில் உள்ள வன உயிரின காப்பாளா் அலுவலகத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களுக்கு மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வெட்டப்பட்ட மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.