மத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்தவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகையை அரசு அலுவலா்கள் சனிக்கிழமை வசூலித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உரிய அனுமதி பெற்ற பிறகே ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும். மேலும், ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் என்றால், அரசின் சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கன்னண்டஅள்ளி ஊராட்சியில் சிவாஜி என்பவா் தனது வீட்டு உபயோகத்துக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்தாா். இதையறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் துரைசாமி, அனுமதியில்லாமல் ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது என அறிவுறுத்தினா்.
ஆனாலும், உரிய அனுமதி பெறாமல் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. தகவறிந்து அங்கு சென்ற அரசு அலுவலா்கள், ஆழ்துளைக் கிணறு அமைத்த சிவாஜிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், ஆட்சியரின் அனுமதி பெற்ற ரிக் வாகன உரிமையாளா் மூலமே ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் என பொதுமக்களை வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழரசன் கேட்டுக் கொண்டாா்.