கிருஷ்ணகிரி

தேனீ வளர்ப்பு மூலம் தென்னையில் மகசூலை அதிகரிக்கலாம்: கருத்தரங்கில் வலியுறுத்தல்

31st Jul 2019 08:56 AM

ADVERTISEMENT

தேனீ வளர்ப்பு மூலம், தென்னையில் மகசூலை அதிகரிக்கலாம் என கிருஷ்ணகிரியை அடுத்த புலியூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
 மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், கிருஷ்ணகிரியில் செயல்படும் வேளாண் அறிவியல் மையம், மாவட்ட வேளாண்மைத் துறை ஆகியன இணைந்து, புலியூர் கிராமத்தில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய தென்னை சாகுபடி குறித்த கருத்தரங்கை நடத்தியது.
 இந்தக் கருத்தரங்கை, ஆட்சியர் சு.பிரபாகர் தொடக்கி வைத்தார். வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் டி.சுந்தராஜ், வேளாண் இணை இயக்குநர் பிரதீப் குமார் சிங், பையூர், வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை பேராசிரியர் எல்.ஜீவஜோதி, வேளாண் அறிவியல் மையத்தின் கே.குணசேகர், மூத்த விஞ்ஞானி பி.எஸ்.சண்முகம், தென்னை வாரிய வளர்ச்சி அலுவலர் சி.சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 தென்னையில் கூடுதல் மகசூல் பெற தேனீ வளர்ப்புப் பயனுள்ளதாக இருக்கும். ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னந் தோப்பில் 2 தேனீ பெட்டிகளை வைக்கலாம். இதனால், மகரந்த சேர்க்கை ஏற்பட தேனீக்கள் உதவும். தேனீ மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட விரும்பும் தென்னை விவசாயிகள், 2 மீட்டர் இடைவெளியில் தேனீ பெட்டிகளை வைக்கலாம். இதன் மூலம் ஆண்டுக்கு 10 முதல் 14 கிலோ வரையிலான தேன் கிடைக்கும். தென்னை மரங்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும்போது, தேனீக்கள் உயிரிழக்கமாமல் இருக்கும் வகையில் தேனீ பெட்டியில் சர்க்கரை கரைசலை வைத்தும், பாதுகாப்பு வலையைக் கொண்டு மூட வேண்டும் எனக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் ஏராளமான தென்னை விவசாயிகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT