கிருஷ்ணகிரி

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு  

31st Jul 2019 08:46 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.18.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, பாரூர் அரசம்பட்டி அருகே ரூ.8.84 கோடி மதிப்பில் 145 மீட்டர் நீளம், 1.50 மீட்டர் உயரத்தில் 5.21 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்கும் வகையிலும், பென்டரஅள்ளியில் ரூ.9.24 கோடி மதிப்பில் 145 மீட்டர் நீளம், 1.50 மீட்டர் உயரத்தில் 3.56 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார்.
 இந்தப் பணிகள் ஆகஸ்ட் மாதம் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதனால், சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டும் உயரும். விவசாயம் பெருகும். தொடர்ந்து, அவர் தளிஅள்ளி கிராமத்தில் நடைபெற்று வரும் ஏரி தூர்வாரும் பணியையும், பிரதம மந்திரியின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பென்டரஅள்ளி, தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரை இணைக்கும் வகையில் ரூ.6.80 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
 இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் முருகேசன், வட்டாட்சியர் முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT