கிருஷ்ணகிரி அணை நீரில் மூழ்கி சேலத்தைச் சேர்ந்த தனியார் சோப்பு நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் எம்.மயில்சாமி (30). இவர் அங்குள்ள சோப்பு தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், தனது நண்பர்களுடன், கிருஷ்ணகிரி அணைக்கு திங்கள்கிழமை வந்துள்ளார். நண்பர்களுடன் அணை நீரில் அவர் குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் நீரில் முழ்கினார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மயில்சாமியைக் காப்பாற்ற முயன்றனர். முடியாத நிலையில், கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மயில்சாமியை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர் உயிரிழந்து விட்டதால் அவரது உடலை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக் கொண்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.