கிருஷ்ணகிரி

நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியர்

19th Jul 2019 02:08 AM

ADVERTISEMENT


தருமபுரி மாவட்ட இளைஞர்கள், பொதுமக்கள் நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வலியுறுத்தினார்.
தருமபுரி அருகேயுள்ள அதியமான்கோட்டை ஏரி மற்றும் அன்னசாகரம் ஏரியில் ரூ.1.18 கோடியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி மற்றும் தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட நிலத்தடி நீர் செறிவூட்டும் பணியினை ஆட்சியர் சு.மலர்விழி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ.4.97 கோடியில் 10 ஏரிகளில் தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், விவசாயிகளுக்கும், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் இலவசமாக வண்டல் மண் வழங்கப்படும். தூர்வாரும் பணிகள் நடைபெறும் அன்னசாகரம் ஏரி உள்பட 10 ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏரிக்கு சொந்தமான இடத்தில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் மற்றும் வீடு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல காவலர்களின் சொந்த முயற்சியால் ஆயுதப்படை மைதானத்தில் மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீரை மேம்படுத்தும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு, கிணறு மற்றும் நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டம் உயந்து வருகிறது.
தருமபுரி மாவட்ட இளைஞர்கள்,பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் இதுபோன்ற மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும்வழங்கும். 
மேலும், குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் தேவையான நிதி உதவிகளும் வழங்கப்படும் என்றார்.
ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்கள் ஆயுதப்படை மைதானத்தில் பார்வையிட சென்ற போது, திடீரென மழை பொழிந்தது. அதையடுத்து, குடை பிடித்தபடி மைதானத்தில் நடந்து சென்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பார்வையிட்டனர்.
ஆய்வின் போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர்கள் சாம்ராஜ், மோகனபிரியா, மாலதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிருஷ்ணன், அருள்மொழிதேவன், வட்டாட்சியர்கள் இளஞ்செழியன், ராதாகிருஷ்ணன் மற்றும் பாசன சங்க விவசாயிகள் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT