மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நான்காம் ஆண்டு பேரவைக் கூட்டம், கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன் தலைவர் சௌந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இணைச் செயலாளர் நந்தியப்பன், வேலூர் மண்டலச் செயலாளர் பிச்சுமணி, மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். காப்பீடுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2003 - க்கு பின்னர் பணி நிரந்தரம் பெற்றவர்களின் ஒப்பந்தப் பணி காலத்தையும் சேர்த்து, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தணிக்கை பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.