கிருஷ்ணகிரி

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

15th Jul 2019 10:00 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே அளேபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சிக்குள்பட்ட அளேபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அளேபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொச்சாரம்பட்டி, கே.குள்ளாத்திரம் பட்டி, கே.அக்ரஹாரம், மல்லாபுரம் மற்றும் நாகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிக்கு முழுமையான சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், பள்ளிக்கு வரும் மாணவ-மாணவியர் விளையாடும் ஆர்வத்தில் அருகில் உள்ள சாலைக்கு செல்கின்றனர். மேலும், சிற்றுண்டிகள் போன்றவை வாங்கவும் சாலைப் பகுதிக்கு செல்கின்றனர். பள்ளிக்கு அருகில் அளேபுரம் பகுதியில் இருந்து மல்லாபுரம் மற்றும் பொச்சாரம்பட்டி செல்லும் சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது, உணவுக்காக நாய்கள் பள்ளி உள்ளே நுழைவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பள்ளிக்கு முழுமையான சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT