கிருஷ்ணகிரி

ஊரகப் பகுதி மாணவர்கள் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

15th Jul 2019 09:59 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு செப்டம்பரில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2019-20-ஆம் கல்வி ஆண்டில் தொடர்ந்து 9-ஆம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வில் பங்கேற்க தகுதியானவர்கள்.
தேர்வு எழுதுவோரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருவாய் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான வருவாய் சான்றிதழை வருவாய்த் துறையினரிடமிருந்து பெற்று வழங்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.5, சேவைக் கட்டணம் ரூ.5 என மொத்தம் ரூ.10 வீதம் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை நிறைவு செய்து பள்ளி தலைமையாசிரியர் மூலம் முதன்மைக் கல்வி அலுவலரிடம் செலுத்த வேண்டும். 
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 25-ஆம் தேதி இறுதி நாள். இதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேர்வுசெய்யப்படும் 50 மாணவர்கள், 50 மாணவியருக்கு 9 முதல் பிளஸ் 2-ஆம் வகுப்பு வரையில் தொடர்ந்து படிக்கும் காலத்துக்கு படிப்பு உதவித்தொகை ஆண்டுதோறும் ரூ.ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
தேர்வாளர்கள் தேர்வில் கருப்பு நிற பந்துமுனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நகராட்சி, மாநகராட்சிப் பகுதியில் படிக்கும் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT