கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவன மேற்பார்வையாளர் ஹரிபிரசாத் (25) மற்றும் தனியார் நிறுவன அதிகாரியான சைதன்யா (25), ஆகிய இருவரும் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் முன் இருசக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தனராம். இந்நிலையில், இவர்களிருவரின் வாகனங்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து இருவரும் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், வியாழக்கிழமை சூளகிரி போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் 2 இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (22), காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளை கேட் பகுதியைச் சேர்ந்த முகமது ரபீக் (23), வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள புதுமனை கிராமத்தைச் சேர்ந்த சர்புதீன் (24) என தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதே போல, அவர்கள் பல இடங்களில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அதுகுறித்தும் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.