கிருஷ்ணகிரி

பெட்டமுகிலாளம் ஊராட்சியில் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

4th Jul 2019 09:50 AM

ADVERTISEMENT

பெட்டமுகிலாளம் ஊராட்சியில் புதிய தடுப்பணைகள் மற்றும் நீர் மேலாண்மை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம், பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குள்பட்ட கம்பளம் கிராமத்தில் எல்.ஐ.சி. வீட்டு வசதி குழுமம் மற்றும் மைராடா கிராம மேம்பாட்டுத் திட்டம் சார்பில் ரூ. 4 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மேலாண்மை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் பார்வையிட்டு பின்னர் கூறியது: தமிழக முதல்வர் குடிநீர் பணிகள் மற்றும் மழை நீரை சேமிக்கும் பொருட்டு பல்வேறு கட்டமைப்புகளுக்காக ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேபோல அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக பல்வேறு குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் ஏரி குளங்கள் தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடை கோடி மலைக் கிராமமான பெட்ட முகிலாளம் ஊராட்சிக்குள்பட்ட கம்பளம் கிராமத்தில்
எல்.ஐ.சி. வீட்டு வசதி குழுமம் மற்றும் மைராடா கிராம மேம்பாட்டுத் திட்டம் சார்பில் ரூ. 4 கோடி மதிப்பில் 27 புதிய தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொண்டு தற்போது 6 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தடுப்பணையிலும் சுமார் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும். அதுமட்டுமின்றி ரூ. 10 ஆயிரம் வீதம் 2 கிணறு உறிஞ்சு குழிப் பணிகள், தலா ரூ. 15  ஆயிரம் மதிப்பில் 20  மண்புழு உரம் தொட்டிப் பணிகளையும், ரூ. 12 ஆயிரம் மதிப்பில் 2  பண்ணை குட்டைகள் தூர்வாரும் பணிகளையும், கோடை உழவு பணிகள் சுமார் 750 ஏக்கர் அளவுக்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் சுமார் 750 ஏக்கர் குழியுடன் கூடிய வரப்பு அமைக்கும் பணிகள் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒசூர் வருவாய்க் கோட்டாட்சியர் குமரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. சேகர், வட்டாட்சியர் பாலசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, இந்துமதி, ஒன்றியப் பொறியாளர் விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT