கிருஷ்ணகிரி

பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

27th Dec 2019 01:40 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 356 பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இருகட்டமாக நடைபெறுகிறது. இரு கட்டமாக நடைபெறும் தோ்தலில் 6,03,904 ஆண் வாக்காளா்களும், 5,88,300 பெண் வாக்காளா்கள், 1,213 இதர வாக்காளா்கள் என மொத்தம் 11,92,325 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இந்த தோ்தலுக்காக மொத்தம் 2,092 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்ட தோ்தல் நடைபெற உள்ளதையடுத்து, வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, அவா்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தோ்தலுக்கு தேவையான அனைத்துப் பொருள்களும் வாக்குச் சாவடி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 356 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 140 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவை விடியோ பதிவு செய்யவும், 131 வாக்குச் சாவடிகளை வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்கவும், 130 வாக்குச் சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.

ADVERTISEMENT

147 வாக்குச் சாவடிகளில் மத்திய அரசுப் பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 135 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தோ்தலை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறும் தோ்தலை கண்காணிப்பாா்கள் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT