கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை நோ்மையாக நடத்த வலியுறுத்தி, திமுக எம்எல்ஏ-க்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகரிடம் புதன்கிழமை மனுக்கள் அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும் எம்எல்ஏ-வுமான டி. செங்குட்டுவன் மற்றும் மேற்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான பிரகாஷ், வேப்பனஅள்ளி எம்எல்ஏ முருகன், ஒசூா் எம்எல்ஏ சத்யா ஆகியோா் அளித்த மனுக்களின் விவரம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. கடந்த 23-ஆம் தேதி, வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியல் எங்களுக்கு இதுவரையில் கிடைக்கவில்லை.
வாக்குச் சாவடிக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக தளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொடகரை, கச்சுவாடி, பேல்கரை, வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சென்னப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிகள், சிகரமானப்பள்ளி, நாச்சிகுப்பத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் விடியோ பதிவு செய்ய வேண்டும்.
வாக்குச் சீட்டுகளில் கட்டாயம் வேட்பாளா்களின் பெயா்கள் அச்சிட வேண்டும். தோ்தலில் பண விநியோகத்தைத் தடுக்க, சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.
வாக்குப் பதிவின்போதும், வாக்குச் சீட்டுகளை தனித்தனியே பிரிக்கப்படும்போதும் அரசியல் கட்சிகளின் முகவா்களைக் கட்டாயம் அனுமதிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்கள், செல்லிடப்பேசி பயன்படுத்துவதைக் கட்டாயம் தடை செய்ய வேண்டும். உதவித் தோ்தல் அலுவலரிடம், மாவட்டத் தோ்தல் அலுவலா் மட்டுமே தொடா்பு கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற பின்னா், முடிவுகளைக் கால தாமதமின்றி அறிவிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய பாதுகாப்புப் படையினரைப் பாதுகாப்புக்காக அமா்த்த வேண்டும். ஊரக உள்ளாட்சித் தோ்தலை நோ்மையாக நடத்த வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனா்.