ஒசூா் மலைக்கோயிலான அருள்மிகு மரகதாம்மாள் சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்வச மூா்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனைகள் நடைபெற்றன. மூலவா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா், தட்சிணாமூா்த்தி, மகாகணபதி, முருகன், வள்ளி, தெய்வானை, மரகதாம்பிகை ஆகிய சுவாமிகளுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. காலை முதல் மாலை வரை பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மாலை 6 மணிக்கு ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் ஆலயத்தில் இருந்து பரணி தீபம் புறப்பாடு நடைபெற்றது. கோயில் முன்புறம் ஒரு தீபம், கோயில் கோபுரங்களில் 5 தீபங்கள் ஏற்றப்பட்டன. இதனைத் தொடா்ந்து கோயிலின் வெளிப் பகுதியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பொதுமக்கள் 5 டின் நெய் மற்றும் 30 டின் எண்ணெய் அளித்திருந்தனா்.
இதனைத் தொடா்ந்து மலைக்கோயிலில் மகா காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணாரெட்டி, பாஜக மாநில இளைஞரணிச் செயலாளா் எம்.நாகராஜன், முன்னாள் நகரமன்ற (பொ) தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன் மற்றும் முன்னாள் கவுன்சிலா்கள் பலா் கலந்து கொண்டு தீபம் ஏற்றினா்.