ஆய்வியல் நிறைஞர் ஊக்கத் தொகை நிறுத்தப்பட்டுள்ளது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு கருவூலக அலுவலரிடம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பின் தலைவர் கோபி தலைமையில், மாவட்டச் செயலர் கார்த்திக், பொருளாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு கருவூலக அலுவலரிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு அரசாணை (நிலை) எண்.194-இன் படி, ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) படிப்புக்கு ஊக்க ஊதியப் பட்டியலை சம்பந்தப்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளிலிருந்து சமர்ப்பிக்கும் போது, ஆய்வியல் நிறைஞர் படிப்புக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கப்படாது என குறிப்புரை வழங்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படுவதாக முதுநிலை ஆசிரியர்கள் எங்கள் அமைப்பின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
அரசு ஆணைப்படி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பகுதி நேர ஆய்வியல் நிறைஞர் படிப்பு முறையான அனுமதி பெற்று பயின்றிருந்தால், அது ஊக்க ஊதியம் பெறுவதற்கு முழு தகுதியுடையதாகும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து முதுநிலை ஆசிரியர்களுக்கு ஆய்வியல் நிறைஞர் படிப்புக்கான ஊக்க ஊதியம் அனுமதிக்கக் கோரி வரும் பட்டியலை திருப்பி அனுப்பாமல், அது சரியாக இருக்கும்பட்சத்தில் ஏற்குமாறு கிருஷ்ணகிரி அரசு சார்-கருவூலக அலுவலகத்துக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.