மத்தூர் அருகே பூஜை செய்வதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.1.20 லட்சம் மோசடி செய்த மூவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சின்னப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சே.சுரேஷ் (22). இவர், மத்தூர் அருகே உள்ள திப்பம்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மனைவி பழனியம்மாளிடம், செய்வினை உள்ளதால் பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். சுரேஷின் பேச்சை உண்மை என்று நம்பிய பழனியம்மாள், சுரேஷிடம் பல தவணைகளில் ரூ.1.20 லட்சம் அளித்துள்ளார். ஆனால், பூஜை செய்யாமல் சுரேஷ் ஏமாற்றி வந்துள்ளார். தான் ஏமாற்றப்படுவதை அறிந்த பழனியம்மாள், சுரேஷ் மீது காவல் துறையில் புகார் அளிக்க முடிவு செய்தார். இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி, சுரேஷை தொடர்பு கொண்ட பழனியம்மாள், தங்கள் வீட்டில் பூஜை செய்ய வேண்டும் எனவும், அதற்கு பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுரேஷ் தனது நண்பர்களுடன் காரில் வந்துள்ளார். அப்போது, பழனியம்மாள், தனது உறவினர்களின் உதவியுடன், சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். பிடிபட்ட நபர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தருமபுரி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சிவா (33), செங்குட்டையைச் சேர்ந்த பி.செந்தில்குமார் (38) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில், மத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, சுரேஷ், செந்தில்குமார், சிவா ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1.20 லட்சம் பணம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.