கிருஷ்ணகிரியில் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
கிருஷ்ணகிரி வட்டார வள மையம் மூலம் தனியார் மழலையர், நர்சரி, மெட்ரிக். பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களுக்கு தகுதியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் கடந்த 2017 - 19 - ஆம் கல்வியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று மையங்களில் 300 ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். இதில் கிருஷ்ணகிரி வட்டார வளமையத்தில் 74 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்றுநர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு சிறந்த முறையில் பயிற்சி நிறைவடைந்த நிலையில், தேர்வில் தேர்ச்சி பெற்ற 63 ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, மாவட்டக் கல்வி அலுவலர் சத்தியசீலன், உதவித் திட்ட அலுவலர் நாராயணா, உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சூசைநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நிகழ்வை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் சத்தார், வட்டார ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.