கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே கார் மீது லாரி மோதல்: 2 பெண்கள் பலி, 6 பேர் படுகாயம்

16th Aug 2019 08:56 AM

ADVERTISEMENT

ஒசூர் அருகே பெங்களூரு நோக்கி முன்னால் சென்ற கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த இரு பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் வந்த 5 பேர், லாரி ஓட்டுநர் ஒருவர் என 6 பேர் காயமடைந்தனர்.
 கர்நாடக மாநிலம், பெங்களூரு பெண்ணேர்கட்டா அருகில் பி.டி.எஸ். லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ். வியாபாரி. இவருடைய மனைவி ஹேமலதா (40). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் மகேஷ் என்பவரது மனைவி அம்பிகா (35) மற்றும் உறவினர்களான சர்வமங்களா (48), சுமித்ரா (45), வித்யா (25), லதா (38) ஆகிய 6 பேரும் ஒரு ஆம்னி காரில், பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, புதன்கிழமை இரவு திருவண்ணாமலைக்குச் சென்றனர். காரை, நாகபூஷணம் (50) என்பவர் ஓட்டிச் சென்றார்.
 கிரிவலத்தை முடித்து நள்ளிரவில் அவர்கள் பெங்களூரு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காமன்தொட்டியில் வியாழக்கிழமை அதிகாலை கார் சென்றபோது, பின்னால் சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி மருந்துப் பொருள் பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரி, காரின் பின்புறம் வேகமாக மோதியது. இதில், காரில் இருந்த ஹேமலதா, அம்பிகா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே இறந்தனர்.
 காயமடைந்த ஓட்டுநர் உள்பட மற்ற 5 பேரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய சரக்கு லாரியும் சாலையில் கவிழ்ந்து, அதன் ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ஏட்டுராஜூக்கும் (32) கால் முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சூளகிரி போலீஸார் நிகழ்விடம் சென்று, இரு சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT