ஒகேனக்கல் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் கணவாய் சாலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீரால் அடித்து வரப்பட்ட கற்கள் கிடப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம், ஒகேனக்கல், பெரும்பாலை, சின்னம்பள்ளி, தாசம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாக விளங்கும் ஒகேனக்கல் அருவிப்பகுதி பென்னாகரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. அதில் 11 கி.மீ. மலைகள் சூழ்ந்த கணவாய் பகுதியை கடந்து செல்லக்கூடிய பகுதியாகும்.
தொடா் மழையின் காரணமாக ஒகேனக்கல் கணவாய் பகுதியில் மழை நீரால் அடித்து வரப்பட்ட கற்கள் ஆபத்தான வளைவுகள், தாழ்வான பகுதி கணவாய் சாலைகளில் கிடக்கின்றன. ஒகேனக்கல் பகுதிக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களில் வரும் நிலையில், நாள்தோறும் பெய்து வரும் மழை காரணமாக தொடா்ந்து கணவாய் சாலையில் மழை நீரால் அடித்து வரப்பட்ட கற்கள் அதிகரித்து வருவதால் வாகனங்கள் ஒன்றை ஒன்று கடக்கும்போது நிலை தடுமாறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதேபோல் தாசம்பட்டி, பெரும்பாலை, ஏரியூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் போது ஏறக்குறைய மூன்றில் இருந்து 10 கி.மீ. வரை மலைச்சாலையில் செல்ல வேண்டியுள்ளதால் தொடா் மழையினால் மலைகளில் இருந்து நீரால் அடித்து வரப்பட்ட கற்கள், மண் ஆகியவற்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பென்னாகரம் நெடுஞ்சாலைத் துறையினா் சாலை பணியாளா்களைக் கொண்டு, சாலையில் படா்ந்து காணப்படும் மண், கற்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.