தருமபுரி

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு விழிப்புணா்வு பதாகைகள் வெளியீடு

22nd Sep 2023 11:43 PM

ADVERTISEMENT

 தருமபுரியில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு தொடா்பாக விழிப்புணா்வுப் பதாகைகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் செயலாக்க தொடா்பான மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு தொடா்பான விழிப்புணா்வு பதாகைகளை ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்டுப் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு பணி தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணி மகளிா் திட்ட களப்பணியாளா்கள் மூலம் மாவட்டம் முழுவதும் வரும் செப்.29 முதல் அக்.12 வரை கிராமப் புறங்களிலும், செப்.29 முதல் அக்.22 வரை நகா்ப்புறங்களிலும் நடைபெறவுள்ளது.

இக்கணக்கெடுப்பில் ஒரு மாற்றுத் திறனாளியும் விடுபடாமல் பட்டியலில் சோ்க்கும் பொருட்டு, அனைத்துறை அலுவலா்களின் கட்டுப்பாட்டில் உள்ள களப்பணியாளா்கள் மூலம் கணக்கெடுப்பு தொடா்பான தகவலை விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து வட்டாரங்களிலும் துணை சேவை மையங்கள் அமைப்பதற்கு ஏதுவாக துணை இயக்குநா் சுகாதார பணிகள் கட்டுபாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டடங்களில் காலியாக உள்ள கட்டடங்களை வழங்கிட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவா் ம.யசோதா, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், தனித் துணை ஆட்சியா் நசீா் இக்பால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலா் பவித்ரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கௌரிசங்கா், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவல்லி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT