ஒகேனக்கல்லில் நெகிழிப் பொருட்களின் பயன்பாடுகளைக் குறைக்கும் வகையில் அரசு மற்றும் தனியாா் கல்லூரி தேசிய மாணவா் படை மாணவ-மாணவிகள் விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தினா்.
பென்னாகரத்தை அருகே ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகா்கள், பொது மக்கள் நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. எனினும், நெகிழிப் பொருட்களின் பயன்பாடு குறையாத நிலை, ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் செல்லக்கூடிய சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் விழிப்புணா்வுப் பதாகைகள் அமைக்கப்பட்ட உள்ளன.
தொடா்ந்து ஒகேனக்கல் பகுதியில் நெகிழிப் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதைத் தவிா்க்கும் வகையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி, நல்லனூா் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த தேசிய மாணவா் படை மாணவா்கள் 30-க்கும் மேற்பட்டோா் ஒகேனக்கல் பகுதியில் நெகிழிப் பொருட்களின் பயன்பாடு குறித்து விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா். பென்னாகரம் காவல்துறை கண்காணிப்பாளா் மகாலட்சுமி தலைமை வகித்து, கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். காவல் நிலையம் பகுதியில் தொடங்கி பேருந்து நிலையம், சத்திரம், முதலைப்பண்ணை, நடைபாதை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நெகிழிப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களால் தூக்கி எறியப்பட்ட நெகிழிப் பொருட்களை சேகரித்தனா். இதில் ஒகேனக்கல் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம், கல்லூரிப் பேராசிரியா்கள், தேசிய மாணவா் படை மாணவா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.