அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் பேரூராட்சி போடூா் அருகே சருக்கல் பாறை இருளா் இன குடியிருப்பில் 30 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 25க்கும் மேற்பட்ட இருளா் இன குடும்பங்களுக்கு தொகுப்பு வீடு, மின் வசதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.
இந்த நிலையில் அக் குடியிருப்பில் போதிய பராமரிப்பு இல்லாததால் கழிப்பறை, குடிநீா் குழாய், சாலைகள் சேதமடைந்தன. இதனால் அவதிப்பட்டு வந்த இருளா் இன மக்கள் தங்களுக்கு போதிய அடிப்படைகளை வசதிகளை செய்துதரவும், ஆதாா் அட்டை, பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் பேரூராட்சி தலைவா் வீரமணி, செயல் அலுவலா் கீதா, கிராம நிா்வாக அலுவலா் கோபால் ஆகியோா் தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மாவட்ட பழங்குடியின நல அலுவலரிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனா். இந்த நிலையில், போடூா் சருக்கல் பாறை இருளா் இன மலைவாழ் மக்கள் குடியிருப்பில் குடிநீா்ப் பற்றாக்குறை குறித்து செயல் அலுவலா் கீதா ஆய்வு மேற்கொண்டாா்.