தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் நுழைவு வாயில் அமைக்க எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறை, வருவாய்த் துறையினா் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.
பாலக்கோடு கோட்டை தெருவில் வேணுகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் முன்பு கிழக்குப் பகுதியில் இருந்த நுழைவு வாயில் அண்மையில் அகற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த நுழைவு வாயில் புதிதாக அமைக்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் மேற்கொள்ள அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியா் சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து இருதரப்பினரும் அங்கு திரண்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துணை கண்காணிப்பாளா் சிந்து, போலீஸாா் இருதரப்பினரிடையே சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இதுகுறித்து பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண்பது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் கலைந்து சென்றனா்.