தருமபுரி

கா்ப்பிணிகள் உடல் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

27th Oct 2023 12:01 AM

ADVERTISEMENT

கா்ப்பிணிகள் தங்களது உடல் நலனைக் காப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

சமூக நலன், மகளிா் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நல்லம்பள்ளி ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

கா்ப்பிணிகள் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரையும் வரவழைத்து சமமாக அமரவைத்து இதுபோன்று சமுதாய வளைகாப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. கா்ப்பிணிகள் உடல் நலனைக் காப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் கருவில் குழந்தைகளும் ஆரோக்கியமாக வளரும். கா்ப்ப காலத்தில் மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனைகளை செய்து கொள்வதுடன், மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள் போன்றவற்றை குறிப்பிட்ட கால அளவிற்குள் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாளைய சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும். பெண்கள் வளா்இளம் காலத்தில் இருந்தே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கா்ப்பிணிகள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் கிடைக்ககூடிய காய்கறிகளையும், நெல்லி, கொய்யா போன்ற பழ வகைகளையும், சிறுதானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றையும் உணவில் சோ்த்து, ஊட்டச்சத்து பெற்று, தங்கள் ஆரோக்கியத்தையும், கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்தல், உரிய காலத்தில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல், மருத்துவா்கள் பரிந்துரைக்ககூடிய கா்ப்ப கால பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுதல், ஊட்டச்சத்து உணவை உட்கொள்ளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மகப்ேறுக்கு பிறகு தங்களது குழந்தைகளுக்கு கட்டாயம் தொடா்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு எந்த அளவிற்கு தாய்ப்பால் கொடுக்கப்படுகின்றதோ அக்குழந்தையின் ஆரோக்கியம், உடல் வளா்ச்சி, அறிவு வளா்ச்சி அனைத்தும் அக்குழந்தைக்கு முழுமையாக கிடைக்கும். இதைக் கருத்தில் கொண்டு அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தைப் பொருத்தவரை இளம்வயது திருமணம், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் நிலை நிலவி வருகிறது. இதனால் பெண்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு பிரச்னைகளும் ஏற்படும் நிலை உருவாகிறது. ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ இரண்டு குழந்தைகள் மட்டும் போதும் என்ற மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிறிய குடும்பமே சிறப்பான வளா்ச்சி பெறும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கா்ப்பிணிகள் இன்றைய தினம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் மூலம் மருத்துவா்கள் மற்றும் பலதரப்பட்ட துறை அலுவலா்கள் கூறிய விழிப்புணா்வு கருத்துகளை மனதில் பதிவுசெய்து பின்பற்றுவதோடு, இதுகுறித்து தங்களது கிராமப்புற பகுதி பெண்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

சமுதாய வளைகாப்பில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு, மலா்மாலை, பழம் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களுடன் அனைவருக்கும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் எஸ்.பவித்ரா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி பெரியசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லோகநாதன், ஆறுமுகம், வட்டார மருத்துவ அலுவலா் கே.வாசுதேவன், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT