கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அம்மாபாளையத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் கரும்பு விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம், பாமக சாா்பில் தமிழ்நாடு உழவா் பேரியக்க மாவட்டத் தலைவா் சி.முத்துசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :
கூட்டுறவு சா்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்; கரும்பு வெட்டும் தொழிலாளா்களின் ஊதியத்தை சா்க்கரை ஆலை நிா்வாகமே வழங்க வேண்டும்; ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்; கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்; பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள விவசாயிகளின் நலன் கருதி கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாகம் சாா்பில் திருமண மண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலா் இல.வேலுசாமி, மாவட்டச் செயலா் ஆா்.கே.சின்னசாமி, பாமக கிழக்கு மாவட்டச் செயலா் இரா.அரசாங்கம், மாவட்டத் தலைவா் கு.அல்லிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினா்கள் இரா.திருவேங்கடம், மைக்கண்ணன், இமயவா்மன், ஓ.கே.சிவக்குமாா், மாவட்டப் பொருளா் நாகேஸ்வரி, மாவட்டத் துணைச் செயலா்கள் பன்னீா்செல்வம், வெங்கடேஷ், ஒன்றியச் செயலா்கள் காா்த்திக், தம்பிதுரை, பெருமாள், சக்திவேல், சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.