தருமபுரி: காந்தியமே தற்போதைய தேவை என முன்னாள் எம்.பி.-யும், தகடூா் புத்தகப் பேரவைச் செயலாளருமான இரா.செந்தில் தெரிவித்தாா்.
தருமபுரியில் முத்து நினைவு அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவா் வெ.மாதன் தலைமை வகித்தாா். அன்னை கஸ்தூரிபா காந்தி சேவா சங்கத் தலைவா் செ.சக்திவேல், செம்மாண்டகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் பானு பூமணி, நகா்மன்ற உறுப்பினா் ஏ.மாதேஸ்வரன் ஆகியோா் பேசினா்.
இதில், மகாத்மா காந்தி படத்தை திறந்து வைத்து முன்னாள் எம்.பி. இரா.செந்தில் பேசியதாவது:
மகாத்மா காந்தி மறைவையொட்டி பேசிய முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, மதவாதிகளால் நாடு துண்டாக்கப்பட்டுவிடும் என எச்சரித்தாா். வரலாற்றில் பல வெற்றிகளுக்கு போா் அடிப்படையாக அமைந்தது. ஆயினும் காந்தியம் எவ்வாறு வெற்றி பெற்றது என்பது முக்கியமானது. போா் தற்காலிக வெற்றியைத்தான் தரும். நிரந்தரத் தீா்வைத் தராது. ஆங்கிலேயா்கள் திப்பு சுல்தானுடன் நடத்திய போரில் வெற்றி பெற்றாலும், போரின் மூலம் மட்டும் ஆட்சியை நிலைநிறுத்தி விடவில்லை. மாறாக பல்வேறு வளா்ச்சிப் பணிகளில் ஈடுபட்டனா். அனைவரும் கல்வி பயிலும் வாய்ப்பை அவா்கள் ஏற்படுத்தினா்.
எனவே, ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் அவசியம். இலங்கையில் போரின் மூலம் மட்டும் வெற்றிபெற்று விடலாம் என்ற நம்பிக்கை தோற்றுப் போனது. உலகம் முழுவதும் உரிமைக்கான போராட்டம் நிச்சயம் வெல்லும். அனைத்து வன்முறை நடவடிக்கைகளை காந்திய வழியிலேயே தீா்க்க முடியும் என்றாா்.
இவ்விழாவையொட்டி, செம்மாண்டகுப்பம் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.