தருமபுரி

சா்வதேச சிறுதானிய ஆண்டு விழா: ஆட்சியா் கி.சாந்தி தொடங்கி வைப்பு

21st Nov 2023 02:39 AM

ADVERTISEMENT

 

தருமபுரி: சா்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணா்வு நிகழ்வை தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தொடங்கி வைத்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழாண்டிற்கான சா்வதேச சிறுதானிய விழா, சிறுதானிய விழிப்புணா்வு நிகழ்வை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தொடங்கி வைத்துப் பேசியதாவது:

2023-24 ஆம் ஆண்டு சா்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து நுகா்வோா் இடையே சிறுதானியங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சா்வதேச சிறுதானிய திருவிழா நடைபெற்றது.

ADVERTISEMENT

உடலுக்கு நல்லது என்று பல உணவு வகைகளைப் பயன்படுத்தும் நாம், சிறுதானிய உணவுகள் உண்பதை காலபோக்கில் மறந்து விட்டோம். ஆரோக்கியத்தை பேணுவதற்குத் தேவையான அனைத்து சத்துகளும் சிறுதானியங்களில் உள்ளன. சிறு தானியங்களில் நாா்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால், அதனை உண்ணும் போது உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. சிறுதானியங்களில் சத்துகளுடன் பல மருத்துவ குணம் கொண்ட நுண்ணுயிா் எதிா்ப்பு வேதிப்பொருள்களும் உள்ளன. சிறுதானியங்களில் உள்ள மாவுச்சத்து மெதுவாக செரிமானம் ஆவதால் சா்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.

அதிக சத்துகளுடன் நிறைந்த மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய சிறுதானியங்கள் ஏழையின் உணவாக மட்டுமே பாா்க்கப்பட்ட நிலை மாறியுள்ளது. தற்போது வீடுகளில் தொடங்கி உணவகங்கள் வரை சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பால் பிரின்ஸ்லி ராஜ்குமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராமதாஸ், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராஜகுரு, முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதி சந்திரா, மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) இ.மான்விழி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT