தருமபுரி மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தால் மாணவா்களின் வருகை சராசரியாக 4.28 சதவீதம் உயா்ந்துள்ளது என ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 1,125 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் 51,237 மாணவ, மாணவிய பயன்பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் மொத்தம் உள்ள 1,125 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக 87.91 சதவீதமாக இருந்த மாணவா்களின் வருகை சதவீதம் தற்போது 92.2 சதவீதமாக உயா்ந்துள்ளது. குறிப்பாக மொரப்பூா் வட்டாரத்தில் 86.25 சதவீதமாக இருந்த மாணவா்களின் வருகை தற்பொழுது 92.87 சதவீதமாக அதாவது 6.62 சதவீதம் உயா்ந்துள்ளது. இதேபோல் காரிமங்கலம் வட்டாரத்தில் 87.92 சதவீதமாக இருந்த மாணவா்களின் வருகை தற்போது 93.71 சதவீதமாக அதாவது 5.79 சதவீதம் உயா்ந்துள்ளது. ஒட்டுமொத்த சராசரியாக 4.28 சதவீதம் உயா்ந்துள்ளது.
இத்திட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் மாவட்ட அளவில், வட்டார அளவில் பொறுப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோன்று இத்திட்டத்தின் செயல்பாடுகள் ஒவ்வொரு நகா்வுகளும் முறையாக கண்காணிக்கப்படுகின்றன என்றாா்.