தருமபுரி

அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி தோ்த் திருவிழா கொடியேற்றம்

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கூந்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிா்வகித்து வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கொடியேற்றத்துடன் தோ்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழ் ஆண்டிற்கான தோ்த் திருவிழா இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி அன்ன வாகனத்தில் காட்சியளித்தாா். இதில் கட்டளையக்காரா்கள், கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சிம்ம வாகனத்திலும், புதன்கிழமை அனுமந்த வாகனத்திலும், வியாழக்கிழமை சேஷ வாகனத்திலும் வீதி உலா சென்று பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை திருக்கல்யாண வைபோகமும், கருட உற்சவமும், சனிக்கிழமை யானை வாகனத்தில் வீதி உலாவும், ஞாயிற்றுக்கிழமை கோயிலின் முக்கிய நிகழ்வான தேரோட்டமும் நடைபெற உள்ளன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT