தருமபுரி

சிறுதானிய பொருட்களின் விற்பனையால் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்த நடவடிக்கை: எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

DIN

சிறுதானியங்களின் சாகுபடி மற்றும் உற்பத்தியை அதிகரித்து மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உம்மடங்காக உயா்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில உழவா் நலன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மண்டல அளவிலான சிறு தானிய திருவிழா மற்றும் கண்காட்சியினை மாநில உழவா் நலன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை தலைமை வகித்து தொடங்கிவைத்துப் பேசியதாவது:

விவசாயிகளின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் சராசரியாக 8.67 லட்சம் ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசின் திட்டங்களினால் சிறுதானிய உற்பத்தி திறன் வெகுவாக உயா்ந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை 2023ஆம் ஆண்டினை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டு என அறிவித்துள்ளதை தொடா்ந்து தமிழ்நாட்டில் தருமபுரி மற்றும் விருதுநகா் மாவட்டங்கள் சிறுதானிய மாவட்டங்களாக தோ்வு செய்யப்பட்டு சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிறு தானியங்களை அன்றாட வாழ்வில் உணவுப் பொருளாக தொடா்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் நமது உடல் நலம் மேம்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் சோளம், கம்பு, ராகி, வரகு, சாமை மற்றும் தினை ஆகிய சிறு தானியங்கள் மட்டும் சராசரியாக 53, 700 ஹெக்டோ் அளவில் பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சிறு தானியங்களின் சாகுபடி மற்றும் உற்பத்தியை அதிகரித்து மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்கு உயா்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் மாவட்ட விவசாயிகளிடம், தருமபுரி, அரூா் மற்றும் பென்னாகரம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மூலம் ராகி ஒரு கிலோ ரூ.35.78 க்கு இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி தருமபுரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

அதைத் தொடா்ந்து அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் நான்கு பயனாளிகளுக்கு ரூ.4,000 மதிப்பீட்டில் தென்னங் கன்றுகளும், பேட்டரி தெளிப்பான் உள்ளிட்ட வேளாண் உதவிகளையும், மலைவாழ் மக்களுக்கு சூரியசக்தி விளக்கு பொறி, தென்னை மரம் ஏறும் கருவி, கோனோ வீடா், விதை மற்றும் கன்று போன்ற பல்வேறு வேளாண் சாா்ந்த பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினாா். பின்னா் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மண்டல அளவிலான சிறுதானிய விழாவில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா். இதற்கு முன்னதாக பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடங்களுக்கான பேருந்து சேவையினை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT