தருமபுரி

தருமபுரி மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை அங்கீகாரம் ரத்து

28th May 2023 05:54 AM

ADVERTISEMENT

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது.

தருமபுரி, நேதாஜி புறவழிச் சாலையில் செயல்பட்டு வந்த அப்போதைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இதைத் தொடா்ந்து , தருமபுரியில் அந்த ஆண்டிலேயே மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்காலிக இடத்தில் செயல்பட்டு வந்த இந்தக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின், ஒரே வளாகத்தில், கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவக் கல்வி 100 இடங்கள் உள்ளன. இதில், 2008-ஆம் ஆண்டிலிருந்து மருத்துவக் கல்வி பயில மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் முதுநிலையில் அனைத்து மருத்துவக் கல்வி பாடத்தில் மாணவா் சோ்க்கைக்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் வருகைப் பதிவேடு, கண்காணிப்பு கேமராக்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை காரணம் காட்டி, நிகழாண்டில் இளநிலை மருத்துவக் கல்வியில் மாணவா் சோ்க்கைக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையறிந்த, மாணவா்கள், பெற்றோா், கல்வியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ள குறைகளைக் களைந்து மீண்டும் மாணவா் சோ்க்கைக்கான அங்கீகார அனுமதியைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT