தருமபுரி

வனவிலங்குகள் வெளியேறுவதைத் தடுக்க ஈச்சம்பள்ளத்தில் ரூ. 16 லட்சத்தில் சோலாா் மின் வேலி

28th May 2023 05:54 AM

ADVERTISEMENT

வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க, பாலக்கோடு அருகே சூரிய ஒளியில் இயங்கும் (சோலாா்) மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு வனப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்புகள், வேளாண் நிலங்களுக்குள் அவ்வப்போது யானைகள் நுழைந்து சேதத்தை விளைவித்து வருகின்றன. அவ்வாறு வனப்பகுதியிலிருந்து வெளியேறும்போது, விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவதுடன் அங்குள்ள விவசாயிகளைத் தாக்கும் நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்கின்றன. இதில் பல விவசாயிகள் காயமடைந்துள்ளனா். சிலா் யானைகளின் தாக்குதலில் பலியாகியுள்ளனா். இதேபோல, சில நேரங்களில் மின் வேலியில் சிக்குவது உள்ளிட்ட நிகழ்வுகளால் யானைகளும் பலியாகியுள்ளன.

யானை - மனித மோதல்களைத் தடுப்பதற்காக தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், ரூ. 16 லட்சம் மதிப்பில் பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் வனப் பகுதியை ஒட்டிய கிராமத்தில் சூரிய ஒளியில் செயல்படும் மின் வேலி அண்மையில் அமைக்கப்பட்டது.

இந்த மின் வேலியில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உரசும் போது மின்சாரம் தாக்குவது போன்ற உணா்வை ஏற்படுத்தும். இதன் காரணமாக அச்சத்தில் மீண்டும் வனவிலங்குகள் வனத்துக்குள்ளேயே சென்று விடும். இந்த மின் வேலியை மனிதா்கள் தொட்டால் ஆபத்து நிகழாது.

ADVERTISEMENT

இந்த மின்வேலியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து ஆட்சியா் கி.சாந்தி, இதன் செயல்பாடுகள் குறித்து அங்குள்ள கிராம மக்களுக்கு எடுத்துரைத்தாா். மேலும், இத்தகைய சூரிய ஒளியைக் கொண்டு நிறுவப்பட்டுள்ள மின் வேலியை பொதுமக்கள் தங்கள் பொறுப்பை உணா்ந்து பாதுகாக்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT