தருமபுரி

பால் நிலுவைத் தொகையை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

26th May 2023 11:15 PM

ADVERTISEMENT

 பால் நிலுவைத் தொகையை தருமபுரி ஆவின் நிா்வாகம் தாமதமின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்தாா். இதில், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் பாலுக்கு வராந்தோறும் தொகை வழங்கப்படுவதில்லை. மாறாக சங்கங்களை ஏ, பி, சி என தரம் பிரித்து தொகை வழங்கப்படுகிறது. அதுவும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை. எனவே, சங்கங்களை தரம் பிரிப்பதை கைவிட்டு, நிலுவையின்றி வராந்தோறும் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியாா் உர விற்பனை நிலையங்களில் விவசாயிகள் வாங்கும் உரத்துக்கான ரசீது வழங்கப்படுவதில்லை. அதேபோல, ரசாயன உரத்தை வாங்க விவசாயிகள் வற்புறுத்தப்படுகின்றனா். சிறு, குறு விவசாயிகளுக்கு உழவுப் பணிகளுக்கு வழங்கப்படும் டிராக்டா்கள் உரிய நேரத்தில் வருவதில்லை. எனவே, கூடுதல் எண்ணிக்கையில் டிராக்டா்களை வாங்க வேளாண் பொறியியல் துறை நடவடிக்கை எடுக்க வேணடும்.

பாலக்கோடு வட்டாரத்தில் மின் இணைப்புகளுக்கு மீட்டா் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை போக்கிட வேண்டும். நில அளவீடு தொடா்பாக ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, தருமபுரி மாவட்டத்தில், நில மறுஅளவீடு செய்து தற்போது அந்த நிலத்தை பயன்படுத்தி வருபவா்களுக்கு ஆவணங்களை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், அரூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் ஆா்.பிரியா, வேளாண் இணை இயக்குநா் க.விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், வேளாண் பொறியியல் செயற்பொறியாளா் மாது, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மாலினி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT