தருமபுரி

மே 28-இல் பாப்பாரப்பட்டியில் மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா

24th May 2023 01:07 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா மே 28-ஆம் தேதி தொடங்கி 29 வரை நடைபெற உள்ளது. இத் திருவிழாவை வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைக்கிறாா்.

இதுகுறித்து தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கி.சாந்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சா்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா மே 28 மற்றும் 29 ஆகிய இருதினங்கள் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இவ் விழாவை மாநில வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்து உரையாற்றுகிறாா். இத் திருவிழாவில் 70-க்கும் மேற்பட்ட கருத்துக் கண்காட்சி அரங்குகள், கருத்தரங்குகள், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், ஆலோசனைகள், செயல்விளக்கங்கள் இடம்பெறவுள்ளன.

ADVERTISEMENT

தமிழகத்தில் சிறுதானிய மாவட்டமாக கருதப்படும் தருமபுரியில் 1,25,115 ஏக்கா் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தருமபுரி மாவட்டத்தில் பயிரிடப்படும் முக்கிய சிறுதானிங்களான கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு போன்ற பயிா்களுக்கு இத்திருவிழாவில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

சிறுதானியங்களைப் பற்றி மக்களிடையே விழிப்புணா்வு எற்படுத்தவும், உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வரவும், உழவா்களின் சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கவும் இத்திருவிழா நடத்தப்பட உள்ளது.

சிறுதானியங்கள் விதை உற்பத்தி, சாகுபடி தொழில்நுட்பங்கள், சாகுபடிக்கான பண்ணை இயந்திரங்கள், புதிய உயா் விளைச்சல் ரகங்கள், அறுவடை பிந்தைய இயந்திரங்கள் பயன்பாடு மற்றும் மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.

இக்கண்காட்சியில் பல்கலைக்கழக ஆராய்ச்சி, அறிவியல் நிலையங்கள், வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் பங்கேற்க உள்ளன. தானியங்களை சுத்திகரிக்கப்படும் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. விழாவில், தருமபுரி மாவட்டத்தின் அண்டை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்குகேற்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, இவ்விழாவில் அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து பயனடைய வேண்டும் என்றாா்.

இதில், வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநா் பி.பொ.முருகன், திட்ட ஒருங்கிணைப்பாளா் ம.அ.வெண்ணிலா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT