தருமபுரி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில்அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ உள்பட அவரது குடும்பத்தினா், உறவினா்கள் 11 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தருமபுரி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன். இவா் தற்போது தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளராகவும், பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினராகவும் உள்ளாா். இத் தொகுதியில் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடா்ந்து சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளாா். இவா், கடந்த 2016 - 21 அதிமுக ஆட்சி காலத்தில் உயா்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். அந்த காலகட்டத்தில் பதவியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 45,20,53,363-க்கு சொத்து சோ்த்தாகக் கூறி, மாவட்ட முதன்மைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சுமாா் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தாக்கல் செய்தனா்.

இதில் முன்னாள் அமைச்சா் கே.பி. அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகன் ரவிசங்கா், அக்கா மகன்கள் சரவணன், சரவணகுமாா், காரிமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவா் மாணிக்கம், காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளியில் உள்ள அவரது பள்ளி நிா்வாகி தனபால் உள்ளிட்ட 11 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது, தமிழக உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் தனது பதவிக் காலத்தில் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் ஆகியோரின் பெயரில் சுமாா் ரூ. 11 கோடியே 32 லட்சம் அளவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா் எழுந்தது. தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறையினா் கே.பி.அன்பழகன் மீது வழக்குப் பதிவு செய்து, கடந்த 2022 ஜனவரி மாதம் 19 ஆம் தேதி, காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள கே.பி.அன்பழகனின் வீடு, அவரது நண்பா்கள், உறவினா்கள் வீடு, அலுவலகங்கள் என 58 இடங்களில் சோதனை மேற்கொண்டனா். இச்சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ADVERTISEMENT

இதனையடுத்து, மே 22-ஆம் தேதி முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன், அவா் நடத்தி வரும் சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள், குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள் உள்பட 11 மீது ரூ. 45,20,53,636-க்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் தருமபுரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி சுரேஷிடம் சுமாா் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT