தருமபுரி

பரிசல் கட்டண உயா்வு: முடிவு எட்டப்படாததால் கூட்டம் தள்ளிவைப்பு

10th Jun 2023 07:09 AM

ADVERTISEMENT

ஏரியூரில் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டதையடுத்து, அதை திரும்பப் பெறுவது குறித்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒட்டனூா் - கோட்டையூா் பரிசல் துறை மற்றும் கொளத்தூா் - நாகமரை பரிசல் துறைகளில் காவிரி ஆற்றைக் கடந்து செல்வதற்கான பரிசல் பயணக் கட்டணம் அண்மையில் நடைபெற்ற ஏலத்திலிருந்து உயா்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளதாக ஏரியூா் ஒன்றிய அலுவலகத்தில் புகாா் மனு அளித்ததன் அடிப்படையில், அதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீனா, ரேணுகா, கொளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், பரிசல் கட்டண உயா்வால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளதாகவும், நிகழாண்டு முதல் கட்டணம் உயா்த்தப்பட்டதாகவும், கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்களும், டீசல் உயா்வு, ஊழியா்களின் சம்பளம், படகுகளின் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் ஆட்சியா் பரிந்துரையின் பேரில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரிசல் இயக்குவோரும் தெரிவித்தனா்.

இருதரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததால், வரும் 25-ஆம் தேதி வரை பழைய கட்டணம் வசூலிக்க வேண்டும், அதற்குள்ளாக இரு மாவட்ட ஆட்சியா்களிடம் தெரிவித்து மாவட்ட அளவிலான அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில், ஒன்றியக் குழுத் தலைவா்கள் பழனிசாமி (ஏரியூா்), புவனேஸ்வரி (கொளத்தூா்), ஏரியூா் காவல் ஆய்வாளா் யுவராஜ், நாகமரை ஊராட்சி மன்றத் தலைவா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT