தருமபுரி

முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக மோசடி: நிதிநிறுவன உரிமையாளா்கள் இருவா் கைது

9th Jun 2023 12:47 AM

ADVERTISEMENT

முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நிதிநிறுவன உரிமையாளா்கள் இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பூனையானூரைச் சோ்ந்த அருண் ராஜா, அவரது சகோதரா் ஜெகன் ஆகியோா் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், போச்சம்பள்ளி மற்றும் ஏலகிரி உள்ளிட்ட இடங்களில் நிதிநிறுவனம் நடத்தி வந்துள்ளனா்.

இந்த நிறுவனத்தில் ரூ. ஒரு லட்சம் முதலீடு செய்தால், அதிக வட்டியாக 100 நாள்களில் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் திரும்ப வழங்கப்படும் என அறிவித்து தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோரிடம் முதலீடுகளைப் பெற்றுள்ளனா். ஆனால், கடந்த ஓராண்டாக அவா்கள் குறிப்பிட்டது போல பணத்தை முதலீட்டாளா்களுக்கு வழங்கவில்லையாம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், தருமபுரி பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த நிதிநிறுவன உரிமையாளா்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் ஜெகன், அருண் ராஜா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும், இவா்கள் இருவரையும் கோவையில் அமைந்துள்ள முதலீட்டாளா்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஜூன் 9-ஆம் தேதி போலீஸாா் ஆஜா்படுத்த உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT