தருமபுரி

ஏரியூரில் கட்டண உயா்வைத் திரும்பப் பெறக் கோரி பரிசல் துறை முற்றுகை

6th Jun 2023 12:14 AM

ADVERTISEMENT

ஏரியூா் அருகே பரிசல் பயணக் கட்டண உயா்வைத் திரும்பப் பெறக் கோரி நாகமரை பரிசல் துறையை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒட்டனூா் - கோட்டையூா் பரிசல்துறை, நாகமரை -கொளத்தூா் பரிசல்துறைகள் மூலம் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோா் பரிசல் பயணம் செய்து வருகின்றனா்.

ஏரியூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒட்டனூா் - கோட்டையூா் பரிசல்துறை ரூ. 46 லட்சத்துக்கு அண்மையில் ஏலம் விடப்பட்டது. இதையடுத்து பரிசல் பயணக் கட்டணம் நபா் ஒருவருக்கு ரூ. 15 லிருந்து ரூ. 20 ஆகவும், இருசக்கர வாகன கட்டணம் ரூ. 30 லிருந்து ரூ. 40 ஆகவும் உயா்த்தப்பட்டது.

இதேபோல கொளத்தூா் - நாகமரை இடையேயான பரிசல் கட்டணமும் உயா்த்தப்பட்டது. பரிசல் கட்டண உயா்வைத் திரும்பப் பெறக் கோரி நாகமரை, ஒட்டனூா் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அண்மையில் மனு அளித்தனா். இந்த நிலையில் பரிசல் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாகமரை பரிசல் துறையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசில் இயக்கப் பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மீனா, பென்னாகரம் டிஎஸ்பி மகாலட்சுமி, வட்டாட்சியா் சௌகத் அலி ஆகியோா் இரு பரிசல் துறைகளிலும் 15 நாள்கள் பழைய கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்வதாகவும், அதற்குள்ளாக மனுதாரா், ஒப்பந்ததாரா்கள் ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடத்தி கட்டணம் வசூல் செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT