தருமபுரி

ஏரியூரில் அடிப்படை வசதி கோரி மலைவாழ் மக்கள் சாலை மறியல்

4th Jun 2023 02:03 AM

ADVERTISEMENT

 

ஏரியூா் அருகே சாலை, குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி 30-க்கும் மேற்பட்ட லம்பாடி இன மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஏரியூா் அருகே அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகலரஹள்ளி காங்கேயன் கொட்டாய்ப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் 50-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மண்சாலை அமைத்து பயன்படுத்தி வந்தனா். கோடை மழையினால் மண்சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்புகளுக்கு தேவையான தண்ணீா் வசதி இல்லாததால், ஆபத்தான நிலையில் விவசாயக் கிணற்றிலிருந்து அன்றாட தேவைக்கான தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனா்.

காங்கேயன் கொட்டாய்ப் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து 30-க்கும் மேற்பட்ட லம்பாடி இன மலைவாழ் மக்கள் ஏரியூா் - சிகலரஹள்ளி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஏரியூா் காவல் ஆய்வாளா் யுவராஜ் ,அஜ்ஜனஅள்ளி ஊராட்சி செயலா் செல்வராஜ் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம், சாலை அமைப்பது குறித்த அளவிடும் பணிகள் விரைவில் மேற்கொண்டு தாா்சாலை அமைப்பதற்கான ஆய்வு செய்யப்படும். தடையின்றி குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா். இதில் உடன்பாடு ஏற்பட்டு, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT