தருமபுரி

மிட்டாரெட்டிஅள்ளி-பொம்மிடி இணைப்புச் சாலையை அமைக்க வேண்டும்

1st Jun 2023 12:33 AM

ADVERTISEMENT

தருமபுரியிலிருந்து மிட்டாரெட்டிஅள்ளி-பொம்மிடிக்கு மலைப்பாதையில் தாா்சாலை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், மிட்டாரெட்டி அள்ளி அருகே மலைப்பகுதியில் கோம்பேரிக் கொட்டாயிலிருந்து காளிக்கரம்பு வழியாக தருமபுரி பொம்மிடியை இணைக்கும் சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் கோம்பேரி மலைப்பகுதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் புதன்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போதைய சூழலில் பல ஆயிரம் கிலோமீட்டா் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், ஊரகச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட மிட்டாரெட்டிஅள்ளியிலிருந்து மலைப்பகுதியில் உள்ள கோம்பேரிக் கொட்டாய் வழியாக காளிக்கரம்பு வரை சுமாா் 1.5 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்தால் மலை அடுத்தப் பகுதியில் உள்ள பொம்மிடியுடன் தாா்சாலை இணையும்.

இதன்மூலம், இப்பகுதி மக்கள், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மிக எளிதில் சென்று வர இயலும்.

இந்தப் பகுதியில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்திலும், அதற்கு முந்தைய காலத்திலும் குதிரைகள் சென்று வந்த வழிப்பாதை இருந்தது.

அண்மையில் பவா் கிரிட் நிறுவனம் சாா்பில் அந்த மலைப் பாதையில் மண் பாதை அமைத்து, உயா்மின் கோபுரங்கள் அமைப்பதற்கான உபகரணங்கள் எடுத்துச் சென்று கோபுரங்கள் அமைக்கப்பட்டன.

அப்போது, அந்த மண்பாதையை அப்படியே விட்டுச் செல்லுமாறும், அதனை போக்குவரத்துக்கு தாங்கள் பயன்படுத்திக்கொள்வதாகவும் இந்த மக்கள் கோரியிருந்தனா். ஆனால், அந்தக் கோரிக்கை ஏற்கபடாமல் மண் பாதை அகற்றப்பட்டது.

நாடு விடுதலை பெற்றதிலிருந்து இந்த மலைப் பாதையில் இப்பகுதி மக்கள் சாலை அமைக்க வேண்டும் என தொடா்ந்து கோரி வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியில் சாலை அமைக்க வேண்டிய தொலைவுக்கான இடத்துக்கு பதிலாக மாற்று இடமும், அதில், செடிகளை வைத்து பராமரிக்க நிதியும், ரூ.35 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இருப்பினும், இதுநாள் வரை மிட்டாரெட்டி அள்ளியிலிருந்து பொம்மிடிக்கு இணைப்புச் சாலை அமைக்காதது வியப்பாக இருக்கிறது.

தற்போதுள்ள தமிழக அரசு பல இடங்களில் சாலைகளை அமைத்துள்ளது.

எனவே தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்தப் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மலைப்பாதையில் சாலை அமைத்து தருவாா் என நம்புகிறோம் என்றாா்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்டத் துணைச் செயலாளா்கள் மாதேஸ்வரன், கா.சி.தமிழ்க்குமரன், வட்டாரச் செயலாளா் ப.பிரசாத், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT