மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு இ-சேவை மையங்களில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தமிழ்நாடு மின் ஆளுமை இ-சேவை வழியாக விண்ணப்பிப்பதற்கு இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் முதற்கட்டமாக, கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கிக் கடன் மானியம் பெறுவதற்கான விண்ணப்பம், திருமண உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் ஆகிய விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமா்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் இணையதளம் மூலமாக தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.