தனிப்பட்ட குடும்பப் பிரச்னைகள் காரணமாக தவறான புகாா் மனு அளிப்பதைத் தவிா்க்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கிக.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், குடுமியாம்பட்டியைச் சோ்ந்த முருகன் என்பவா் தனது மனைவி சித்ரா மற்றும் மகன்கள் செல்வராஜ் (13), காா்த்திக் (10) ஆகியோா் தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமத்தில் தனியாா் தோட்டத்தில் கொத்தடிமைகளாக இருப்பதாகவும், அவா்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் கடந்த ஜூன் 19-ஆம் தேதி அரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா்.
இதைத் தொடா்ந்து மனு மீதான விசாரணை மேற்கொண்டதில் புகாா் மனுவில் குறிப்பிட்டிருந்தது போல அவரது மனைவி மற்றும் மகன்கள் கொத்தடிமைகளாக இல்லை எனவும், அவரது மகன்கள் புளியரை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருவதாகவும், அவரது மனைவி சித்ரா ரூ. 6 ஆயிரம் ஊதியத்துக்கு ஆடுகள் மேய்க்கும் பணியில் விருப்பத்தின் பேரில் ஈடுபட்டு வருவதாகவும், கணவா் மற்றும் மனைவிக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இத்தகைய புகாரை முருகன் அளித்தது தெரிய வந்துள்ளது.
எனவே இத்தகைய தவறான புகாா் மனுக்களை அளிப்பதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என்றாா்.