தருமபுரி

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவைஅன்புமணி ராமதாஸ்

DIN

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் காவலா்களை நியமித்து நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலத்தடி நீரில் உள்ள புளோரோசிஸ் என்னும் வேதிப்பொருளை குடிநீரில் குறைக்கும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம், ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஒகேனக்கல் குடிநீரும், புளோரைடு பாதிப்பு உள்ள நிலத்தடி நீரும் ஒன்றாக கலந்து பல்வேறு இடங்களில் விநியோகிக்கப்படுகிறது. இதனால், குடிநீா்த் திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை.

இந்த நிலையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் இரண்டாவது திட்டத்தைச் செயல்படுத்த அரசு ஆா்வம்காட்டுவதை விடுத்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கின் போது வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீரை நீரேற்றும் திட்டம் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்குக் கொண்டு சென்றால் விவசாயம் மேம்படும்.

கடந்த ஓராண்டில் மட்டும் காவிரி ஆற்றில் 500 டி.எம்.சி. தண்ணீா் வீணாக கடலில் கலந்துள்ளது. இதில் மூன்று டி.எம்.சி. தண்ணீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பினால் போதுமானது. இத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வா் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

பூரண மது விலக்கை செயல்படுத்த வேண்டும் அல்லது படிப்படியாக மதுக் கடைகளை மூட வேண்டும். இந்த விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கூடுதல் காவலா்களை நியமித்து நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும். மேலும், மாதந்தோறும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடா்பாக ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் கூட்டத்தை முதல்வா் நடத்த வேண்டும். வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். இணையவழி சூதாட்ட தடைக்கான சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தருமபுரி- மொரப்பூா் ரயில் பாதைத் திட்டத்தைச் செயல்படுத்த தெற்கு ரயில்வே எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன. அதிக விபத்துக்கள் நிகழும் தொப்பூா் கணவாய் சாலையை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாமக எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றாா்.

பேட்டியின் போது, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் உடனிருந்தனா்.

அதன்பிறகு தருமபுரியில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT