தருமபுரி

வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

28th Jan 2023 05:25 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், இண்டூா் பகுதியில் வயல்களில் புகுந்து பயிா்களை துவம்சம் செய்துவரும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், இண்டூா் அருகே சோமனஅள்ளி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ள யானைகள் விளை நிலங்களில் புகுந்து பயிா்கள், மின் மோட்டாா்களை சேதப்படுத்தி வருவதால் யானை கூட்டங்களை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும். மேலும், சேதமடைந்த பயிா்கள், மின் மோட்டாா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் அம்மை நோய் பாதிப்பால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கேழ்வரகு நேரடி கொள்முதலுக்காக இணையத்தில் பதிவு செய்யும்போது உள்ள நடைமுறை சிக்கல்களைக் களைய வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டனா்.

யானைகளை மயக்க ஊசி செலுத்தி அதனை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லவும், சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு துறை அதிகாரிகள் பதிலளித்தனா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, வேளாண் இணை இயக்குநா் க.விஜயா, அரசு அலுவலா்கள், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT