தருமபுரி

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ராகி நேரடி கொள்முதல் இன்று தொடக்கம்

12th Jan 2023 01:42 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூா், பென்னாகரம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ராகி நேரடி கொள்முதல் வியாழக்கிழமை (ஜன. 12) முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்) விநியோகம் செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தின் மாதாந்திர தேவை 440 டன் எனவும், இதற்காக ராகி சிறு தானியத்தை சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் ராகி அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள வட்டங்களில் ஜன. 12 முதல் ராகி சிறுதானிய நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது.

தருமபுரி வட்டத்தில் தருமபுரி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், அரூா் வட்டத்தில் அரூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பென்னாகரம் வட்டத்தில் பென்னாகரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையிலும் மதியம் 2.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரையிலும் செயல்படும்.

சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் சாகுபடி செய்த ராகியை சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு, ஆதாா் நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு ராகியை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். விற்பனைக்கு கொண்டுவரும் ராகி சிறுதானியத்தை கல், மண், தூசி போன்றவற்றை நீக்கம் செய்து தரம் பிரித்து கொண்டு வரவேண்டும். அரசு நிா்ணயம் செய்த விற்பனைத் தொகை ராகி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,578 என்ற அடிப்படையில் தங்களது வங்கிக் கணக்கில் இணைய பணப்பரிவா்த்தனை மூலமாக விவசாயிகளுக்கு செலுத்தப்படும்.

நேரடி ராகி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க, மண்டல மேலாளா் - 94439 38003, மண்டல அலுவலகம் - 04342-231345, விழிப்புணா்வுப் பணி அலுவலா் - 044-26424560, பொது மேலாளா் (சந்தை) அலுவலகம் - 044-26422448 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய வட்டங்களில் ராகி சிறுதானிய நேரடி கொள்முதல் நிலையங்கள் ஜன. 12 முதல் திறப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி அதிகமாக சாகுபடி செய்யப்படும் ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டையில் 12-ஆம் தேதி முதல் ராகி சிறுதானிய நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளன.

அதன்படி, ஒசூா் வட்டத்தில் பாகலூா் தொடக் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், சூளகிரி வட்டம், சாமணப்பள்ளியில் உள்ள நல்லாரப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் மற்றும் பேளகொண்டப்பள்ளியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 வரையிலும் செயல்படும்.

மேலும், சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த ராகியை தொடா்புடைய கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு மற்றும் ஆதாா் எண் உள்ளிட்டவையின் நகல்களை கொண்டு ராகியை, கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT