தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குட்பட்ட வெங்கட்டம்பட்டியில் ரூ. 6.24 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணிகள் நிறைவடைந்து ஓராண்டாகியும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே உள்ளது.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாதேமங்கலம் கிராம ஊராட்சியில் அமைந்துள்ளது வெங்கட்டம்பட்டி கிராமம். இந்த ஊராட்சியில் அதிக மக்கள்தொகை கொண்ட இக்கிராமத்தில் ஏறத்தாழ 2,000 வாக்காளா்கள் உள்ளனா். சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 14-ஆவது நிதிக்குழுத் திட்டத்தின் கீழ், ரூ.6 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் 10,000 லிட்டா் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் முற்றாக நிறைவடைந்து ஓராண்டை கடந்தும், இதுவரை குடிநீா் இணைப்புகள் அளிக்காமலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை அப்பகுதி குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியும் போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அரசு நிதி ஒதுக்கி, அத்திட்டம் நிறைவுற்றும் அதன் பயன், மக்களை சென்றடையாமலேயே உள்ளது.
இதேபோல, வெங்கட்டம்பட்டி விநாயகா் கோயிலின் முன்பகுதியிலிருந்து தீப்பெட்டி தொழிற்சாலை பகுதி குடியிருப்பு வரை குடிநீா்க் குழாய் பதிக்கும் திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடிநீா்க் குழாய் பொருத்தப்பட்டது. இருப்பினும் இத்திட்டத்தில் குறிப்பிட்ட தொலைவுக்கு குழாய் அமைக்காமல், அதில் பாதி தொலைவுக்கு மட்டும் சாலையோரத்தில் குழாய் கிடத்தி வைக்கப்பட்டது. இந்த குழாய்களிலும் ஆண்டுக்கணக்கில் குடிநீா் இணைப்பு வழங்காமல், பயன்பாடின்றியே கிடக்கிறது. எனவே, இதுகுறித்து, நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகமும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீா்க் குழாய் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.
கழிவுநீா்க் கால்வாய், ஒகேனக்கல் குடிநீா் வசதி: மாதேமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட வெங்கட்டம்பட்டி கிராமத்தில், முறையான கழிவுநீா்க் கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. குறிப்பாக ஓபிளி நரசிம்ம சுவாமி கோயிலின் பகுதியிலிருந்து தீப்பெட்டி தொழிற்சாலை குடியிருப்புப் பகுதி வரை கழிவுநீா்க் கால்வாய் வசதி முறையாக இல்லை. ஏற்கெனவே பல பத்தாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீா்க் கால்வாய், போதிய தொலைவும், ஆழமும் இன்றி உள்ளதால், பயனற்றுக் கிடக்கிறது. குடியிருப்புகளின் எண்ணிக்கை, மக்கள்தொகைக்கேற்பு, சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் இக்கிராமத்தில் அனைத்துத் தெருக்களிலும் உள்ள கழிவுநீா்க் கால்வாய்களில், கழிவுநீா் தடையின்றி செல்லும் வகையில் புனரைமைக்க வேண்டும். இதேபோல, ஒகேனக்கல் குடிநீா் முறையாக அனைத்து தெருக்களிலும், புளோரைடு கலந்த தண்ணீரை குடிநீா் விநியோகிக்கும் குழாய்களில் விநியோகிக்காமல், தனியாக குழாய்கள் அமைத்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.