ஏரியூா் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் பணியின்போது மருத்துவரை, குடி போதையில் தாக்கிய நபரை ஏரியூா் போலீஸாா் கைது செய்தனா்.
ஏரியூா் பகுதியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஏரியூா், கூா்க்காம்பட்டி, அஜ்ஜன அள்ளி, நெருப்பூா், சோழப்பாடி, மலையனூா், இராம கொண்ட அள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோா்கள் சிகிச்சைக்காக வந்து செல்லுகின்றனா்.
இந்த நிலையில் ஏரியூா் அருகே கூா்க்காம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (30), தன்னுடைய மகள் சுஹானாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ஏரியூா் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தாா். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா் லோகநாயகி உணவு அருந்திக் கொண்டிருந்ததால், செவிலியா் மூலம் சுஹானாவிற்கு முதலுதவி அளிக்குமாறும், சிறிது நேரத்தில் வந்து சிகிக்சை அளிக்க வருவதாகவும் தெரிவித்தாா்.
இந்த நிலையில் குடி போதையில் இருந்த ஆனந்தகுமாா், தனது மகளுக்கு உடனடியாக மருத்துவா் சிகிச்சை அளிக்க வேண்டும் என செவிலியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வாா்த்தையில் மருத்துவரைப் பேசி, தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து மருத்துவா் லோகநாயகி ஏரியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் அளித்துள்ளாா். அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு, மருத்துவரை பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்கிய ஆனந்தகுமாரைக் கைது செய்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.